ஜி.டி. நாயுடு உருவாக்கிய கல்விப் பேரரசு: இன்றும் தொடரும் அவரது கல்விப் பாரம்பரியம்!
கோவை, "இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு, கோவையில் தொழிற்கல்வி மற்றும் செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவினார். அவரது கல்விச் சிந்தனைகள் இன்றும் பல ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தற்போது ஜி.டி. நாயுடு அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளை 1946-ம் ஆண்டு 'தொழில்துறை தொழிலாளர் நலச் சங்கம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் 'ஜி.டி. நாயுடு அறக்கட்டளை' எனப் பெயர் மாற்றப்பட்டது. 'சர் ஆர்தர் ஹோப்' தொழில்நுட்பக் கல்லூரி 1945-ம் ஆண்டு ஜி.டி.நாயுடுவால் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், தற்போது 'அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. 'சர் ஆர்தர் ஹோப்' பாலிடெக்னிக் கல்லூரி தமிழகத்தின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியாக ஜி.டி. நாயுடு இந்த நிறுவனத்தை நிறுவினார். பின்னர் இதை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தற்போது இது 'அரசு பாலிடெக்னிக் கல்லூரி' என்ற பெயரில் இயங்கி வருகிறது. அதேநேரத்தில், ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்ட பள்ளிகள் அவரது குடும்பத்தினரால், அவர் வகுத்துக் கொடுத்த கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஜி.டி. தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த தொழில்நுட்பக் கல்வி வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இயந்திரப் பொறியியல், டூல் அண்ட் டை வடிவமைப்பு, மெகாட்ரானிக்ஸ்உள்ளிட்ட துறைகளில் மாணவர்களுக்கு நேரடி செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கெடீ பப்ளிக் பள்ளி கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள 'கெடீ பப்ளிக் பள்ளி', பாடப்பயிற்சியுடன் செய்முறை கற்றல் மற்றும் தொழிற்கல்விக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் தனித்துவமான கல்வி முறையைப் பின்பற்றி வருகிறது. ஜி.டி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 1982-ம் ஆண்டு சிறிய நர்சரி பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று முழுமையான கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பாடப்பயிற்சியுடன் யோகா, இணைப்பாட செயல்பாடுகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து, மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கெடீ மேம்பட்ட ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் கெடீ மேம்பட்ட ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில், வாகனம் ஓட்டும் திறன் மட்டுமின்றி, வாகன பராமரிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் பொறுப்பான ஓட்டுநர்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் மையங்கள் இந்த கல்வி நிறுவனங்களுடன் சேர்த்து, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் ஜி.டி. அருங்காட்சியகம் மற்றும் பரிசோதனை அறிவியல் மையம் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன. இங்கு செய்முறை விளக்கங்கள் மற்றும் அறிவியல் மாதிரிகள் மூலம் மாணவர்கள் அறிவியலை எளிதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். கல்வி மூலம் நிலைத்திருக்கும் ஜி.டி. நாயுடுவின் பாரம்பரியம் கண்டுபிடிப்பாளராக மட்டுமல்லாமல், திறன் அடிப்படையிலான கல்விக்கு முன்னுரிமை அளித்த கல்வியாளராகவும் ஜி.டி. நாயுடு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்து, அவரது தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து உயிர்ப்புடன் கொண்டு செல்கின்றன.