ஜி.டி. நாயுடு மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி
இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு (1893–1974) பற்றி பேசத் தொடங்கினாலே, மின் மோட்டார், பேருந்து போக்குவரத்து, வேளாண் கண்டுபிடிப்புகள், தொழில்துறை வளர்ச்சி போன்ற சாதனைகளே பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவரது வாழ்க்கையில் மிகக் குறைவாக அறியப்பட்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அது, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் அவர் மேற்கொண்ட சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி. பல்துறை ஆளுமை தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல், சித்த மருத்துவத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜி.டி.நாயுடு செயல்பட்டது அவரது பல்துறை ஆளுமையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம், மூலிகைகள், கனிமங்கள் மற்றும் உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளின் தொகுப்பாகும். பழங்கால ஓலைச்சுவடிகளில் பதிவான இந்த மருத்துவ முறையை, அக்காலத்தில் பலர் நாட்டுப்புற மருத்துவமாக மட்டுமே கருதினர். ஜி.டி.நாயுடுவின் சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆனால் ஜி.டி.நாயுடு அதனை அப்படிப் பார்க்கவில்லை. மின்மோட்டார் அல்லது இயந்திரங்களை ஆராய்ந்த அதே அறிவியல் அணுகுமுறையுடன் சித்த மருத்துவத்தையும் ஆய்வு செய்தார். பழமையான குறிப்புகளை சேகரித்தல், மருந்துகளைத் தயாரித்தல், அவற்றைச் சோதித்தல், முடிவுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் சித்த மருத்துவத்தை முறையாக ஆவணப்படுத்த முயன்றார். இந்த முயற்சியின் முக்கிய மையமாக கோவையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் செயல்பட்டது. இதில் ஜி.டி.நாயுடு இயக்குநராக இருந்தார். பிரபல சித்த மருத்துவர் டாக்டர் எம்.சண்முகவேலுவுடன் இணைந்து, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்து, மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் பயன்பாடுகளை பதிவு செய்தனர். புத்தகம் வெளியீடு இந்த ஆய்வின் பலனாக, 1973-ம் ஆண்டு 'Siddha Research Pharmacopoeia' என்ற முக்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. டாக்டர் எம்.சண்முகவேலு எழுதிய இந்த புத்தகம், ஜி.டி.நாயுடு நிறுவிய தொழில்துறை தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில், 14 அத்தியாயங்களில் 550-க்கும் மேற்பட்ட மருந்துகள், 15-வது அத்தியாயத்தில் 251 தனிப்பட்ட மருந்து குறிப்புகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகள் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தின் முன்னுரையில், இவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்டு, நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு, அனுபவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் தற்போது இணைய காப்பகங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. சித்த மருத்துவ ஆய்வாளர்களும் இன்றளவும் இதனை மேற்கோள் நூலாக பயன்படுத்தி வருகின்றனர். பயன்பெற்ற நோயாளிகள் 1950-ம் ஆண்டுகளின் இறுதியில் ஜி.டி.நாயுடு ஜெர்மனிக்கு சென்றபோது, அந்நாட்டின் Esslinger Zeitung மற்றும் Stuttgarter Zeitung உள்ளிட்ட பத்திரிகைகள் அவரது மருத்துவ ஆய்வுகள் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டன. அவற்றில், நீரிழிவு, வெள்ளைப்படுதல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்காக அவர் உருவாக்கிய சித்த மருந்துகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் ஆய்வு செய்து, மூலிகைகள் மற்றும் கனிமப் பொருட்களை இணைத்து தயாரித்த மருந்துகள் பல நோயாளிகளுக்கு பயனளித்ததாக அக்கால செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சிகிச்சையில் அவரது மருந்துகள் மூலம் பயன்பெற்றார்கள் என்றும் செய்திகள் தெரிவித்தன. இளம் ஜெர்மன் மருத்துவர்களுக்கு அழைப்பு ஜெர்மன் செய்தித் தகவல்களின்படி, ஜி.டி.நாயுடு தனது மருத்துவ ஆய்வுகளுக்காக தனியாக மருத்துவமனையையும் அதனுடன் இணைந்த ஆராய்ச்சி ஆய்வகத்தையும் உருவாக்கியிருந்தார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு, அவற்றின் விளைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி பயணத்தின்போது, தனது நிறைவு நாள் நிகழ்ச்சியில், "இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதற்காக இளம் ஜெர்மன் மருத்துவர்கள் இந்தியா வர வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அமெரிக்க நிறுவனம் பாராட்டு ஜி.டி. நாயுடுவின் மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாக, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer அனுப்பிய பாராட்டுக் கடிதம் குறிப்பிடப்படுகிறது. கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் மற்றும் குடும்ப ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள அந்தக் கடிதம், புற்றுநோய் தொடர்பான அவரது ஆராய்ச்சி முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறப்படுகிறது. சித்த மருத்துவ மரபு ஜி.டி. நாயுடு நவீன மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல. அவர் உருவாக்கிய மருந்துகள் அனைத்தும் சித்த மருத்துவ மரபின் அடிப்படையிலானவை. எனவே, அவற்றின் மருத்துவ செயல்திறன் தற்போதைய அறிவியல் மற்றும் மருத்துவ தரநிலைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், சுமார் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆய்வு, ஆராய்ச்சி ஆய்வகம், மருத்துவமனை, மருத்துவக் குறிப்புகள், சர்வதேச அளவிலான சொற்பொழிவுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் அடங்கிய மருந்தியல் புத்தகம் ஆகியவை அவரது சித்த மருத்துவ ஆராய்ச்சியின் தீவிரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ அறிவும் பாதுகாக்கப்பட வேண்டும் இந்தியாவே தனது மின்மோட்டார், ரேடியோ, கடிகாரம் போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.டி.நாயுடு, அதேபோல் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவும் அறிவியல் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவான 'Siddha Research Pharmacopoeia' புத்தகம், இன்று அரை நூற்றாண்டைக் கடந்தும் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.
இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு (1893–1974) பற்றி பேசத் தொடங்கினாலே, மின் மோட்டார், பேருந்து போக்குவரத்து, வேளாண் கண்டுபிடிப்புகள், தொழில்துறை வளர்ச்சி போன்ற சாதனைகளே பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றன.
ஆனால், அவரது வாழ்க்கையில் மிகக் குறைவாக அறியப்பட்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அது, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் அவர் மேற்கொண்ட சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி.
பல்துறை ஆளுமை
தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல், சித்த மருத்துவத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜி.டி.நாயுடு செயல்பட்டது அவரது பல்துறை ஆளுமையை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம், மூலிகைகள், கனிமங்கள் மற்றும் உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளின் தொகுப்பாகும். பழங்கால ஓலைச்சுவடிகளில் பதிவான இந்த மருத்துவ முறையை, அக்காலத்தில் பலர் நாட்டுப்புற மருத்துவமாக மட்டுமே கருதினர்.
ஜி.டி.நாயுடுவின் சித்த மருத்துவ ஆராய்ச்சி
ஆனால் ஜி.டி.நாயுடு அதனை அப்படிப் பார்க்கவில்லை. மின்மோட்டார் அல்லது இயந்திரங்களை ஆராய்ந்த அதே அறிவியல் அணுகுமுறையுடன் சித்த மருத்துவத்தையும் ஆய்வு செய்தார். பழமையான குறிப்புகளை சேகரித்தல், மருந்துகளைத் தயாரித்தல், அவற்றைச் சோதித்தல், முடிவுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் சித்த மருத்துவத்தை முறையாக ஆவணப்படுத்த முயன்றார்.
இந்த முயற்சியின் முக்கிய மையமாக கோவையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் செயல்பட்டது. இதில் ஜி.டி.நாயுடு இயக்குநராக இருந்தார். பிரபல சித்த மருத்துவர் டாக்டர் எம்.சண்முகவேலுவுடன் இணைந்து, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்து, மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் பயன்பாடுகளை பதிவு செய்தனர்.
புத்தகம் வெளியீடு
இந்த ஆய்வின் பலனாக, 1973-ம் ஆண்டு 'Siddha Research Pharmacopoeia' என்ற முக்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. டாக்டர் எம்.சண்முகவேலு எழுதிய இந்த புத்தகம், ஜி.டி.நாயுடு நிறுவிய தொழில்துறை தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தில், 14 அத்தியாயங்களில் 550-க்கும் மேற்பட்ட மருந்துகள், 15-வது அத்தியாயத்தில் 251 தனிப்பட்ட மருந்து குறிப்புகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகள் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தின் முன்னுரையில், இவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்டு, நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு, அனுபவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் தற்போது இணைய காப்பகங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. சித்த மருத்துவ ஆய்வாளர்களும் இன்றளவும் இதனை மேற்கோள் நூலாக பயன்படுத்தி வருகின்றனர்.
பயன்பெற்ற நோயாளிகள்
1950-ம் ஆண்டுகளின் இறுதியில் ஜி.டி.நாயுடு ஜெர்மனிக்கு சென்றபோது, அந்நாட்டின் Esslinger Zeitung மற்றும் Stuttgarter Zeitung உள்ளிட்ட பத்திரிகைகள் அவரது மருத்துவ ஆய்வுகள் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டன. அவற்றில், நீரிழிவு, வெள்ளைப்படுதல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்காக அவர் உருவாக்கிய சித்த மருந்துகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
பல ஆண்டுகள் ஆய்வு செய்து, மூலிகைகள் மற்றும் கனிமப் பொருட்களை இணைத்து தயாரித்த மருந்துகள் பல நோயாளிகளுக்கு பயனளித்ததாக அக்கால செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சிகிச்சையில் அவரது மருந்துகள் மூலம் பயன்பெற்றார்கள் என்றும் செய்திகள் தெரிவித்தன.
இளம் ஜெர்மன் மருத்துவர்களுக்கு அழைப்பு
ஜெர்மன் செய்தித் தகவல்களின்படி, ஜி.டி.நாயுடு தனது மருத்துவ ஆய்வுகளுக்காக தனியாக மருத்துவமனையையும் அதனுடன் இணைந்த ஆராய்ச்சி ஆய்வகத்தையும் உருவாக்கியிருந்தார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு, அவற்றின் விளைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி பயணத்தின்போது, தனது நிறைவு நாள் நிகழ்ச்சியில், "இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதற்காக இளம் ஜெர்மன் மருத்துவர்கள் இந்தியா வர வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க நிறுவனம் பாராட்டு
ஜி.டி. நாயுடுவின் மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாக, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer அனுப்பிய பாராட்டுக் கடிதம் குறிப்பிடப்படுகிறது.
கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் மற்றும் குடும்ப ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள அந்தக் கடிதம், புற்றுநோய் தொடர்பான அவரது ஆராய்ச்சி முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறப்படுகிறது.
சித்த மருத்துவ மரபு
ஜி.டி. நாயுடு நவீன மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல. அவர் உருவாக்கிய மருந்துகள் அனைத்தும் சித்த மருத்துவ மரபின் அடிப்படையிலானவை. எனவே, அவற்றின் மருத்துவ செயல்திறன் தற்போதைய அறிவியல் மற்றும் மருத்துவ தரநிலைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
அதே நேரத்தில், சுமார் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆய்வு, ஆராய்ச்சி ஆய்வகம், மருத்துவமனை, மருத்துவக் குறிப்புகள், சர்வதேச அளவிலான சொற்பொழிவுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் அடங்கிய மருந்தியல் புத்தகம் ஆகியவை அவரது சித்த மருத்துவ ஆராய்ச்சியின் தீவிரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
மருத்துவ அறிவும் பாதுகாக்கப்பட வேண்டும்
இந்தியாவே தனது மின்மோட்டார், ரேடியோ, கடிகாரம் போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.டி.நாயுடு, அதேபோல் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவும் அறிவியல் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார்.
அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவான 'Siddha Research Pharmacopoeia' புத்தகம், இன்று அரை நூற்றாண்டைக் கடந்தும் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.