Skip to main content

GD NAIDU

முறைகேடு செய்ய முடியாத வாக்குப்பதிவு இயந்திரம்

வாக்கு முறைகேடுகளைத் தடுப்பதற்கு, இந்திய தேர்தல் ஆணையம் EVM-ஐ அறிமுகப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த முறைகேடு செய்ய முடியாத வாக்குப்பதிவு இயந்திரம் (The Tamper-Proof Vote Recording Machine) என்பது ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் அவரது காலத்துக்கு மிகவும் முற்பட்ட, வியக்கத்தக்க ஒரு கண்டுபிடிப்பாகத் திகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அதாவது 1980 வரை இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால், அதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே, ஜி.டி. நாயுடு இயந்திர ரீதியாக வாக்குகளைப் பதிவு செய்யவும், மனிதத் தலையீடுகள் மூலம் நடைபெறும் முறைகேட்டில் இருந்து அவற்றைப் பாதுகாக்கவும் கூடிய ஒரு கருவியை உருவாக்கியிருந்தார்.

இந்த கண்டுபிடிப்பின் பின்னணி சூழல் இதனை இன்னும் சிறப்பானதாக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை கொண்ட தேர்தல்களின் காலகட்டத்தில் நாயுடு வாழ்ந்தார். 1936-ல் நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தலில் அவரே போட்டியிட்டு தோல்வியுற்றார். அக்காலகட்டத்தில் வாக்குப்பதிவு என்பது காகிதங்களை சார்ந்த, சிக்கலான ஒரு நடைமுறையாக இருந்தது. அது ஒவ்வொரு நிலையிலும் பாதிப்புக்குள்ளாகக் கூடியதாக இருந்தது.

வாக்குச்சீட்டுகள் சேதமடையலாம், தவறாக எண்ணப்படலாம், போலியாகத் திணிக்கப்படலாம் அல்லது காணாமலும் போகலாம். வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெற்றதுடன், அது முழுமையாக அதை நிர்வகிக்கும் அதிகாரிகளின் நேர்மையையே சார்ந்திருந்தது. ஒவ்வொரு மனித செயல்பாட்டையும் ஒரு இயந்திரமாகவே இயல்பாகவே பார்க்கும் ஒருவருக்கு, வாக்குச்சாவடி என்பது இயந்திரமயமாக்கலுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் தோன்றியது.

நாயுடுவின் இயந்திரம் ஒரு எளிய, அதே சமயம் வலிமையான சிந்தனையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது, ஒரு வாக்கு அளிக்கப்பட்ட உடனேயே, அதை ஒரு இயந்திர அமைப்பு பதிவு செய்து கொள்ளும். அந்த பதிவை, அதை இயக்கும் நபர் உட்பட யாரும் ரகசியமாக மாற்றியமைக்க முடியாது. மேலும், வாக்குப்பதிவுக்கு பிறகு மொத்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாதவாறு அதன் வடிவமைப்பு அமைந்திருந்தது. சுருக்கமாகச் சொன்னால், வாக்காளரின் விருப்பத்திற்கும் இறுதி வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் மனிதர்களால் செய்யக்கூடிய வகையில் இருந்த முறைகேடுகளை நீக்கும் வகையில் இந்த கண்டுபிடிப்பு கருவி அமைக்கப்பட்டிருந்தது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பிற்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் (EVM) இதற்கும் உள்ள ஒற்றுமையை எவரும் எளிதில் கவனிக்க முடியும். நவீன EVM-களும் நாயுடு கையாண்ட அதே கொள்கைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. மின்சுற்றுகளுக்குப் (circuits) பதிலாகப் கியர்கள் மற்றும் லிவர்களை (gears and levers) அவர் பயன்படுத்தினார் என்பது மட்டுமே வித்தியாசம்.

மாற்றியமைக்க முடியாத வாக்கு எண்ணிக்கை, மோசடி மற்றும் எண்ணும் நேரத்தைக் குறைக்கும் செயல்முறை ஆகியவை இதில் அடங்கும். எந்தவொரு அரசு ஆணையத்தின் ஆதரவோ அல்லது ஆராய்ச்சி மானியமோ இல்லாமல், ஒரு மாகாணத் தொழில் நகரத்தில் செயல்பட்ட ஒரு தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர் இத்தகைய சிந்தனையை இவ்வளவு முன்கூட்டியே எட்டியது அவரது சிந்தனையின் தனித்துவத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரம் ஒருபோதும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு வரவில்லை. தேர்தல்களை நவீனமயமாக்கக்கூடிய ஒரு இந்திய கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்வதில் காலனித்துவ நிர்வாகிகளுக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவும் இயந்திரமயமாக்கப்பட்ட வாக்குப்பதிவு முறையை ஏற்றுக்கொள்வதற்குப் பல தசாப்தங்களை எடுத்துக்கொண்டது.

1952-ல் அவர் உருவாக்கிய, மூவாயிரம் ரூபாய் விலை கொண்ட, ஆனால் அரசு உரிமம் கிடைக்காததால் பயன்பாட்டிற்கு வராமல் போன இருவர் அமரக்கூடிய பெட்ரோல் காரைப் போலவே, இந்த வாக்குப்பதிவு இயந்திரமும் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்த ஒரு தயாரிப்பாக இல்லாமல், ஒரு சாத்தியக்கூறின் செயல் விளக்கமாகவே எஞ்சியது.

நாயுடுவுக்கு இது பழகிப்போன ஒன்றுதான். அவரது கண்டுபிடிப்புகளில் சில தொழில்துறைகளையே மாற்றியமைத்தன, வேறு சிலவோ ஒரு கருத்தை நிரூபித்துவிட்டு, உலகம் அதைப் புரிந்துகொள்ளும் வரை காத்திருந்தன.

இருப்பினும், அறிவுசார் வரலாற்றின் ஒரு பகுதியாக அந்த இயந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் ‘தேர்தல் மீதான நம்பிக்கை’ சார்ந்த சிக்கலை, அது தேசியக் கொள்கையாக மாறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஒரு இந்தியப் பொறியாளர் அடையாளம் கண்டு அதற்கான தீர்வை முன்மொழிந்தார் என்பதை இது காட்டுகிறது.

நாயுடுவின் தொலைநோக்கு சிந்தனைப் பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது. அவர் வெறும் மோட்டார்கள் மற்றும் சாதனங்களை உருவாக்குபவராக மட்டும் இருக்கவில்லை. பொது நிறுவனங்கள், கல்வி மற்றும் குடிமை வாழ்க்கை குறித்தும் அவர் சிந்தித்தார், மேலும், பொறியியல் மூலம் அவற்றை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். நான்கு வருடப் பாடத்திட்டங்களை இரண்டு வருடங்களிலேயே கற்பிக்க முடியும் என்று வாதிட்டுத் தொழில்நுட்பக் கல்வியைச் சீர்திருத்த முயன்ற அதே மனிதர், ஜனநாயகத்தின் செயல்பாட்டு முறைகளையும் நேர்மையானதாக அமையும் வகையில் பொறியியல் ரீதியாக வடிவமைக்க முடியும் என்றும் நம்பினார்.

நாயுடுவின் அந்த முறைகேடு செய்ய முடியாத (tamper-proof) வாக்குப்பதிவு இயந்திரம், கோயம்புத்தூரில் அவரது சாதனைகளைப் பறைசாற்றும் கண்காட்சிகள் மற்றும் அருங்காட்சியகங்களில் இன்றும் நினைவுகூரப்படுகிறது.