Skip to main content

GD NAIDU

ஜி.டி.நாயுடுவின் நெருங்கிய நண்பராக சத்யராஜ்… ஜி.டி.என். திரைப்பட கதாபாத்திரம் குறித்து மனம் திறந்தார்!
ஜி.டி.நாயுடுவின் நெருங்கிய நண்பராக சத்யராஜ்... ஜி.டி.என். திரைப்பட கதாபாத்திரம் குறித்து மனம் திறந்தார்!

கோவை,
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படமான ஜி.டி.என்.-ல் ஜி.டி.நாயுடுவின் நண்பராக அமைதியான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஜி.டி.என். திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் அவரது வாழ்க்கையைச் சுற்றி பயணிக்கின்றன.
அவற்றில், நடிகர் சத்யராஜ் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் அமைதியானதாகவும், அதே நேரத்தில் நாயுடுவின் வாழ்க்கையுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்ததாகவும் அமைந்துள்ளது.

ஜி.டி.நாயுடுவின் நெருங்கிய நண்பர்

கோவையில் ஜி.டி.நாயுடுவின் சமகாலத்தவராகவும், அவருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த ஒருவரின் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் பிரமாண்டமான காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, வரலாற்றுப் பக்கங்களில் அதிகம் இடம்பெறாத, ஆனால் ஒருவரின் வாழ்க்கையை ஆழமாக வடிவமைக்கும் நட்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையைப் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, திரைப்படத்தின் கதையை உருவாக்கிய இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், இந்த நட்பை கதையில் மிகவும் கவனமாக இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் விஷயங்கள் தவிர்ப்பு

அந்த காலகட்டத்தில் ஜி.டி.நாயுடுவின் நட்பு வட்டத்தில் ராமசாமி நாயக்கர், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடனான நெருக்கமான உறவை மையப்படுத்தியே இந்தப் படத்தில் நட்பின் ஒரு பகுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் கூறுகையில், “அந்த நட்பு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையே இருந்த அரசியல் சார்ந்த விஷயங்களை நாங்கள் வேண்டுமென்றே தவிர்த்துள்ளோம். இது அதைப் பற்றிய திரைப்படம் அல்ல. கண்டுபிடிப்பாளரான ஜி.டி.நாயுடுவுக்குப் பின்னால் இருந்த மனிதரைப் பற்றிய திரைப்படம்” என தெரிவித்துள்ளார்.

சத்யராஜ் கதாபாத்திரம்

பொதுவெளியில் அறியப்பட்ட வரலாற்றுக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த மனிதருக்கும் இடையிலான அந்த வித்தியாசமே சத்யராஜின் கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையில் சாதாரண காலங்களிலும், கடினமான சூழல்களிலும் அவருடன் பயணித்த ஒரு நம்பிக்கையான நண்பராக சத்யராஜின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் நெகிழ்ச்சி

இந்த திரைப்படம் தனக்கு தனிப்பட்ட முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என சத்யராஜ் தெரிவித்துள்ளார். திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், தான் கோவையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையுடன் தனக்கு இருந்த தொடர்பு மேலும் வலுவாக உணரப்பட்டதாக கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “கோவையில் பிறந்து வளர்ந்தவன் நான். இத்தனை ஆண்டுகளாக இங்கே இருந்தும் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்துக்குச் சென்றதில்லை என்பது எனக்குள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவை. அவை எடிசனின் கண்டுபிடிப்புகளுக்கு இணையாக போற்றப்பட வேண்டும்” என்றார்.

மாதவனின் தோற்றம் குறித்து சத்யராஜ் பாராட்டு

படத்தில் ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ள மாதவனின் தோற்ற மாற்றத்தையும் சத்யராஜ் வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக, வயதான ஜி.டி.நாயுடுவாக மாதவன் தோன்றும் இறுதிக்கட்ட தோற்றத்திற்காக செய்யப்பட்ட மேக்கப் பணிகள் தன்னை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியதாக சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ் போன்ற ஒரு அனுபவமிக்க நடிகரையே மாதவனின் தோற்ற மாற்றம் ஆச்சரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை தன்னை எதிர்பார்த்ததைவிட ஆழமாக ஈர்த்ததாகவும், படப்பிடிப்பில் மாதவனின் நடிப்பும் கதாபாத்திரத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் தன்னை கவர்ந்ததாகவும் சத்யராஜின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையின் மற்றொரு பக்கம்

தமிழ் சினிமாவில் 4 தசாப்தங்களுக்கும் மேலாக பயணித்து வரும் சத்யராஜ், பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வணிக ரீதியான திரைப்படங்கள் முதல் முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர கதாபாத்திரங்கள் வரை அவரது திரைப்பயணம் நீண்டது.
அத்தகைய அனுபவமிக்க நடிகரை, ஜி.டி.நாயுடுவின் நண்பராக இந்தப் படத்தில் இடம்பெறச் செய்திருப்பது கதைக்கு மற்றொரு பரிமாணத்தை வழங்குகிறது.

மனிதநேயத்தின் மற்றொரு பக்கம்

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், சாதனைகள் மற்றும் பொதுவெளியில் அவர் பெற்ற புகழ் ஆகியவற்றுக்கு அப்பால், அவரை நம்பிய மனிதர்கள் யார், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் யார், அவர்களுடனான உறவு எப்படி இருந்தது என்பதையும் இந்த திரைப்படம் பேசுகிறது.
அந்த வகையில், மாதவனின் ஜி.டி.நாயுடுவுக்கு அருகில் சத்யராஜின் கதாபாத்திரம் அமைந்திருப்பது, கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையின் மனிதநேயமான மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டு 7-ந் தேதி ரிலீஸ்

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தை வர்கிஸ் மோலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் ஆகஸ்டு 7-ந் தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.