Skip to main content

GD NAIDU

‘ஜி.டி.என்.’ மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு
சென்னை,
'ஜி.டி.என்.' மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சபாநாயகர் ஜே.சிடி.பிரபாகர் கூறினார்.

சபாநாயகர் பார்த்தார்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்.' திரைப்படத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கடந்த வாரம் இறுதியில் சென்னை என்.எப்.டி.சி.யில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலில் பார்வையிட்டார்.
அவருடன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி, அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.
திரைப்படத்தை பார்த்த பிறகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-

மாணவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்

'ஜி.டி.என்.' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டும். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகள் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை 'ஜி.டி.என்.' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்ய உள்ளேன். இதன் மூலம் திரைப்படம் திரையரங்குகளைத் தாண்டி கல்வி சார்ந்த தளத்திலும் மாணவர்களை சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுயசார்பு மிகவும் அவசியம்

வருங்கால தலைமுறையினருக்கு சுயசார்பு மிகவும் அவசியம். இளைஞர்கள் தங்களது அறிவு மற்றும் திறமைகளை வளர்த்துக்கொண்டு, அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டும்.
முறையான கல்வி வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தபோதிலும், தனது சுய முயற்சி, ஆர்வம் மற்றும் அறிவாற்றலின் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை, இளைஞர்களுக்கு சுயசார்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணம்.

காலத்தின் தேவை ஜி.டி.என்.

இளைஞர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முழுமையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். படைப்பாற்றல் என்பது தானாக உருவாகும் ஒன்றல்ல; அதனை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ள வேண்டும்.
'ஜி.டி.என்.' திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பணியையும் நான் பாராட்டுகிறேன். திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 'ஜி.டி.என்.' திரைப்படம் தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் பாராட்டு

'ஜி.டி.என்.' திரைப்படம் தற்போது 2-வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சபாநாயகரின் இந்த பாராட்டு படத்துக்கு மேலும் கவனம் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை நேர்மையாக பதிவு செய்த விதம் மற்றும் ஆர்.மாதவனின் நடிப்பு ஆகியவை விமர்சகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளன.
தமிழக அரசு பள்ளி மாணவர்களும் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று சபாநாயகர் வலியுறுத்தியுள்ள நிலையில், 'ஜி.டி.என்.' திரைப்படத்தின் பார்வையாளர் வட்டம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள ஜி.டி.என். திரைப்படத்தை வர்கீஸ் மோலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் ஆர்.மாதவன் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவையில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'ஜி.டி.என்.' “இந்தியாவின் எடிசன்” என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை இப்படம் பதிவு செய்கிறது.