திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 4-வது வாரத்தை எட்டியுள்ள ‘ஜி.டி.என்‘ (GDN) திரைப்படத்தின் வசூல் லாபத்தில் ஒரு பகுதி, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்‘ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த நற்செயலை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் தொடர்கிறது.
‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி.நாயுடுவின் வரலாற்றுச் சுவடு-
இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழிற்துறை முன்னோடியுமான ‘கோவையின் எடிசன்‘ ஜி.டி.நாயுடுவின் (கோபாலசாமி துரைசாமி நாயுடு) வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘ஜி.டி.என்‘. கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஆர்.மாதவனும் கிருஷ்ணகுமார் ராமகுமாரும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
ஜி.டி.நாயுடுவின் கதாபாத்திரத்தில் ஆர்.மாதவன் நடித்துள்ள இத்திரைப்படத்தில், செல்லம்மாள் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணியும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய், யோகி பாபு உள்ளிட்ட திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கமலாநாதன் ஒளிப்பதிவும், பிஜித் பாலா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 7, 2026 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 4-வது வாரத்தில் தடம் பதித்துள்ளது.
திரையைத் தாண்டிய சமூகப் பொறுப்புணர்வு-
திரைப்படத்தின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, வர்கீஸ் மூலன் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு அமைப்பான (CSR) வர்கீஸ் மூலன் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வர்கீஸ் மூலன் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஜி.டி.என் திரைப்படத்திற்குப் பொதுமக்கள் மற்றும் திரை ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவிற்கும் அன்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜி.டி.நாயுடு அவர்களின் வியக்கத்தக்க வரலாற்றுப் பயணத்தை மக்கள் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது வெறும் வசூலில் மட்டும் இல்லை; அது திரையைத் தாண்டி சமுதாயத்தில் ஏற்படுத்தும் நல்ல மாற்றத்தில்தான் உள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திரைப்படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக அர்ப்பணிக்கிறோம்.”
தொடரும் நற்செயல் பாரம்பரியம்-
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இது இரண்டாவது தயாரிப்பாகும். முன்னதாக தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்‘ திரைப்படத்தை இவர்கள் தயாரித்திருந்தனர். அப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு, நலிவடைந்த பின்னணியைச் சேர்ந்த 60 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்து தரப்பட்டன. அதே பாதையைப் பின்பற்றி, தற்போது ‘ஜி.டி.என்‘ திரைப்படத்தின் மூலமும் நலிவடைந்த சிறப்புச் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ள தயாரிப்பு நிறுவனத்திற்குத் திரையுலகினரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.