ஆரம்பத்தில் தோட்ட வேலைக்கு சென்றார். அப்போது ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த காலத்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அந்த பிரமாண்டமான மோட்டார் சைக்கிளை ஜி.டி.நாயுடு பார்த்து வியந்தார். அந்த மோட்டார் சைக்கிள் பழுதானது. அதனை ஆங்கிலேய அதிகாரி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அங்கு சென்ற ஜி.டி.நாயுடு ஆங்கிலேய அதிகாரிக்கு கழிவு துணி மற்றும் மண்எண்ணெய் கொடுத்து உதவினார். இதனால் ஆங்கிலேய அதிகாரி அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது ஜி.டி.நாயுடுவுக்கு அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இதனால் அவர் தோட்ட வேலையில் இருந்து விலகி ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரியை சந்தித்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அக்கு வேறு, ஆணி வேராக அவர் பிரித்தார். அங்குதான் அவருக்கு ஆட்டோ மொபைல் பற்றிய ஆர்வம் தொடங்கியது. பின்னர் அவர் பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார். ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அதில் ஒரு பஸ்சை கடனாக பெற்று முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் செயல்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பஸ்சை இயக்கினார்.
பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். குறைந்த விலை காரை தயாரித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டார்.