கோவை என்ற பெயர் இன்று தொழில்துறை வளர்ச்சியின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. ஆனால், அந்த அடையாளத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் ஜி.டி. நாயுடு. கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர், ஆசிரியர், கனவாளி என்று பன்முகங்களை கொண்ட அவர், இந்தியா தன்னிறைவு குறித்து பேசுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதை நடைமுறையில் செய்து காட்டியவர்.
கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு தொழில் துறை கண்காட்சியில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பொருள், அவரது சிந்தனையின் ஆழத்தை வெளிப்படுத்தும் “ரசன்ட்” ரேசர். சாதாரணமாக இந்த ரேசர் தோன்றினாலும், “இந்தியாவில் தயாரிக்க முடியாதது எதுவுமில்லை” என்ற ஜி.டி.நாயுடுவின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.
1937-ல் உருவான உள்நாட்டு மின்மோட்டார்
1937-ம் ஆண்டு, தனது கோவை பட்டறையில், முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மின்மோட்டாரை ஜி.டி.நாயுடு உருவாக்கினார். அப்போது, இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ்தான் இருந்தது. தொழில்துறையில் வெளிநாட்டு ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில், இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இது வெறும் மாதிரி வடிவமைப்பு அல்ல. தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய, முழுமையான பொறியியல் சாதனையாக உருவாக்கப்பட்டது.
மண்ணெண்ணெயில் இயங்கிய விசிறி
1940 மற்றும் 1950-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வசதி குறைவாக இருந்தது. இதை புரிந்துகொண்ட ஜி.டி. நாயுடு, மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய விசிறியை வடிவமைத்தார்.
சாதாரண மக்களின் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் என்பது நகரங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான கருவி என்பதையும் எடுத்துக்காட்டியது.
உலக கவனத்தை ஈர்த்த “ரசன்ட்” ரேசர்
ஜி.டி. நாயுடுவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ரசன்ட் ரேசர் கருதப்படுகிறது. அவரின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ரேசர், தரம் மற்றும் வடிவமைப்பில் சர்வதேச தரத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய வர்த்தக கண்காட்சிகளில் இந்த தயாரிப்பு கவனத்தை ஈர்த்தது. பின்னர் உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இந்த ரேசர், கோவையில் உருவானது என்பது அந்நாளில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தகவலை மக்களிடம் கொண்டு சென்ற யு.எம்.எஸ். வானொலி
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் தகவல் பரிமாற்றம் முக்கிய தேவையாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஜி.டி. நாயுடு தயாரித்த யு.எம்.எஸ். வானொலி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முக்கிய வானொலிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வெளிநாட்டு வானொலிகளை வாங்க முடியாத குடும்பங்களுக்கு இது ஒரு மலிவான மாற்றாக அமைந்தது. தகவல் மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியை குறைப்பதில் இது முக்கிய பங்காற்றியது.
அன்றே உருவான வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்றைக்கு செயல்பாட்டில் இருந்தாலும் பல தசாப்தங்களுக்கு முன்பே, ஜி.டி. நாயுடு வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவியை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
அந்தக் காலத்தில் இது ஒரு புதுமையான முயற்சியாகக் கருதப்பட்டாலும், இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது தேர்தல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப சிந்தனைகளில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது.
கோவையின் ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமாக இருந்த கருவிகள்
கோவை தொழில்துறை வளர்ச்சியில் ஜவுளித் துறை முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பல உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரக் கூறுகள் ஜி.டி. நாயுடுவின் பட்டறைகளில் உருவானவைதான்.
பெரிய தொழிற்சாலைகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்த சிறிய கியர்கள், போல்டுகள் மற்றும் இயந்திரப் பகுதிகளில் பல அவரது பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிந்தனை ஒன்று… கண்டுபிடிப்புகள் பல..
ஜி.டி. நாயுடுவின் அனைத்து கண்டுபிடிப்புகளிலும் ஒரு பொதுவான சிந்தனை இருந்தது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஆராய்ந்து, அவற்றை இந்தியாவில் தயாரிக்க முடியுமா? என்பதை அவர் தொடர்ந்து சோதித்து பார்த்தார்.
அவரது நோக்கம் வெறும் தொழில் வளர்ச்சி அல்ல. “இந்தியாவில் உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே. அதனால்தான், ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளான மோட்டார், ரேசர் ஒன்றும் பெரிதல்ல என்று பலர் கருதுகின்றனர்.
ஜி.டி.நாயுடுவின் சிந்தனை
“ஒரு பொருளைப் பாருங்கள். அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அறியுங்கள். பின்னர் அதை நாமே உருவாக்க முடியுமா? என்று முயற்சி செய்யுங்கள்.” அதுவே ஜி.டி.நாயுடுவின் சிந்தனை. அந்த சிந்தனையே இன்று வரை கோவையின் தொழில்துறை அடையாளமாக இருந்து வருகிறது.